Sunday, 3 June 2018


ஸ்ரீ இராமஜெயம்
  

மேலப்பிள்ளையார்குளம்
அருள்மிகு கங்கையம்மன் கோயில் கொடைவிழா

12,13,14 மே 2018.
 
                 அருள்மிகு ஸ்ரீகங்கையம்மன் திருக்கோயில் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோயில் தாலுகா, அழகியபாண்டியபுரம் சிற்றாற்று கரையில் பிள்ளையார்குளம் கிராமத்தில்; அருள்மிகு காளியம்மன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ளது. 
                    மகாவிஷ்ணு வாமனாவதாரத்தில் மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்று அடி மண் யாசித்தார், மகாபலி; அதன்படி மூன்று அடி மண்  கொடுத்தார். திருமால் ஆகாயத்தையும் பூமியையும், இரண்டு அடிகளால் அளந்து. மூன்றாம் அடியை மகாபலியின் சிரசில் வைத்து அவனை பாதாளத்துக்குப் போக்கினார். ஆகாயத்தை அளக்கச் சென்ற பாதத்தைத் தேவர் முதலானோர்கள் வணங்க பிரமதேவர் தீர்த்தத்தால் அப்பாதத்தைச் சுத்தி செய்து பூஜை செய்தார். அப்பொழுது விஷ்ணுவின் மாயா சக்தியினால் அப்பாதத்தில் ஜலப்பிரவாஹம் ஏற்பட்டு ஆகாயமார்க்கமாகச் சென்றது, அதுவே கங்கா என்றும் தேவநதி என்று பூமியில் வழங்கப்பட்டது.

  தற்போதய ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் தொணாகொண்டாபட்டிணத்தில் பூஜ கொல்லா என்ற வல்லிடையர்களால் ஸ்ரீகங்கையம்மன் பூஜிக்கப்பட்டு வருகிறாள். பசுக்கூட்டங்களை தமது சொத்தாக கருதி வந்ததால் நீர் ஆதார தெய்வமான கங்கையை எப்போதும் நம்முன்னோர்கள் வழிபட்டு வந்தனர்.; மழை பொய்த்ததால் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக புல்பூண்டுகள் இன்றி பசுக்களுக்கு உணவின்றி சிரமப்படதால் கொல்லா இனத்தவர்கள் பக்தியுடன் விரதம் இருந்து கங்கையம்மனை வேண்டி பிரார்த்தனை செய்தனர். கருணை தெய்வமான கங்கையம்மன் மக்களின் பக்திக்கு இறங்கி அருளுடன் மழை பொழியச் செய்து வறட்சியை நீக்கினார். மழையை பொழிந்த காரணத்தால் மக்கள் ஸ்ரீகங்கையம்மனை பக்தி சிரத்தையுடன் பூஜை செய்த வருகின்றனர். 

                         தெலுங்கு மன்னர்கள் தென்பகுதியில் ஆட்சி நிர்மாணம் செய்தபோது மேலும் தெற்கு நோக்கி இடம் பெயர்ந்த பூஜ கொல்லவாரு இனத்தவர் மதுரை பகுதியில் குடியிருந்தனர். நாயக்கர் மன்னர் ஆட்சிகாலத்தில் மதுரையில் இருந்து மற்ற இனத்தாருடன் பெரும் கூட்டமாக தெற்கு நோக்கி வந்தவர்கள் சாத்தூர் அருகில் உள்ள வேப்பிலைபட்டியில் குடியிருந்தனர். பின் அழகியபாண்டியபுரத்தின் அருகில் உள்ள மேலபிள்ளையார் குளத்தில் வசித்து வந்தனர். வல்லிடையர்கள் வசித்த பகுதியில் இன்றும் வல்லிடையர்குளம் என்ற பெயருடைய குளம் உள்ளது. தாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் தங்கள் குலதெய்வமான ஸ்ரீகங்கையம்மனை வைத்து வழிபட்டு வருகின்றனர். வல்லிடையர்கள் தாங்கள் நார் பெட்டியில் எடுத்துவந்த ஸ்ரீகங்கையம்மனை  இங்குள்ள ஆத்தி மரத்தடியில் கிழக்கு நோக்கி பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். இந்த சூழ்நிலையில் கொல்லவாரு இனமக்கள் வேறு இடம் செல்ல நினைத்த போது கங்கையம்மன் “இங்கேயே நிரந்திரமாக பிரதிஷ்டை ஆகிவிட்டேன், என்னை எடுத்துச்செல்ல வேண்டாம்” என்று இடி மின்னலுடன் அசிரீ வாக்கு ஒலித்தது. இதனால் கங்கையம்மனை இங்கேயே விட்டுவிட்டனர். இங்கிருந்து புலம் பெயர்ந்த மக்கள் பிடிமண் எடுத்து தாமிரபரணி ஆறு பாயும் செழிப்பான இடங்களில் தங்கள் வாழும் பகுதியில் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டி வழிபாடு செய்து வருகின்றனர். 

    இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட புயல் மழையில் சிற்றாறு வெள்ளபெருக்கெடுத்து கரை புரண்டு ஒடியதனால் கங்கையம்மன் கற்சிலை தண்ணீரில் முழ்கி மண்ணுக்குள் சென்று விட்டது. வெள்ளம் வற்றிய பிறகு பார்த்தால் அம்பாளின் கற்சிலை என்ன ஆனது என கண்டுபிடிக்க முடியவில்லை. காலப்போக்கில் விளைநிலமாக மாறிய நிலத்தில் பயிர் செய்வதற்காக உழுதபோது கலப்பை உழமுடியாமல் தடைபட்டு நின்ற இடத்தில் இரத்தம் பீறிட்டு வந்தது. இந்த தகவல் மேலபிள்ளையர்குளம் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமத்தினரிடமும் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்தை ஊர் பெரியவர்கள் அனைவரும் நேரில் பார்வையிட்டு இரத்தம் வெளிப்பட்ட இடத்தை தோண்டி எடுத்து பார்த்த போது அரக்கனை சம்ஹாரம் செய்வது போல் அம்பாள் கற்சிலையாக இருப்பது தெரியவந்தது. இதனை உறுதிபடுத்த கருடன் ஆகாயத்தில் வட்டமிட்டு சகுனம் காட்டியது. இதனால் பூமியை தோண்டி அம்பாள் கற்சிலையை எடுக்க முயற்சித்தபோது முடியவில்லை. பின் கங்கை அம்மனை பூஜித்து வந்த வல்லிடையர்களில் ஒருவர் கற்சிலையை எடுக்க உதவி புரிய கற்சிலை அசைவு கொடுத்து பூமியின் மேல் கொண்டுவரப்பட்டது.

                      கலப்பை ஏறிய இடத்தில் இரத்தக்கசிவு தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. இதை பார்த்த ஊர்மக்கள் இரத்தம் வந்த இடத்தில் மருந்து பூசி பக்தியுடன் தொழுது நின்றனர். அம்மாள் பக்தர்களின் பக்தியை ஏற்றுக்கொண்டு இரத்தம் வருவதை நிறுத்தி வேண்டுதலுக்கு செவிமடுத்தாள். ஆனி பௌர்ணமியன்று ஆத்திமரத்தடியில் மறுபடியும் அம்பாளை கிழக்கு நோக்கி பிரதிஷ்டை செய்து இங்கு வழிபட்டு வருகின்றனர். பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டதால் பூமியின் அடியில் அதிக வெப்புடன் இருந்த அம்மாளின் கற்சிலை வெளியில் வந்ததும் வெப்பம் தணியாது உக்கிரமானதால் கட்டாரங்குளம், பிள்ளையார்குளம், செழியநல்லூர் ஆகிய ஊர்களில் வாழ்ந்து வந்த மக்களுக்கு வெப்புநோய், அம்மைநோய் மற்றும் பலவித நோய்கள் உண்டாயிற்று. அருள்நிறைந்த அன்னையின் திருக்கோயிலுக்கு வந்து முறையிட்ட மக்களின் பிரார்த்தனைக்கு இரங்கிய அம்மாள் ஆங்கார தேவதையாக இருந்தவள் உக்கிரம் தனிந்து சாந்தம் அடைந்து தன்னை வடக்கு நோக்கி பிரதிஷ்டை செய்து ஸ்ரீ காளியம்மன் என்ற பெயரில் வழிபாடு செய்ய அருள் பாலித்தாள். அதன்படியே அருள்மிகு காளியம்மன் பிரதிஷ்டை செய்து கோயில்கட்டி வழிபாடு நடத்தப்படுகிறது. கோயில் மண்டபம் கட்டுதல் பணியில் 1933 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ம் தேதி (1109 கார்த்திகை மாதம் 21 ம் தேதி) தங்களை ஈடுபடுத்திக்கொண்ட யாதவ பெரியோர்களின் பெயர்களும்   கோயில் கல்வெட்டில் உள்ளது.

                       ஆத்திமரத்து ஸ்ரீகங்கையம்மன் பக்தர்கள் அம்பாளுடன் காட்டமராஜாவையும் போத்துராஜாவையும் மாசான போத்தியையும் வணங்கி வருகின்றனர். விழாக்காலங்களில் விரதம் இருந்த பட்டு;கள் தெலுங்கில் அம்மன் பாடலை பாடி துதிக்கின்றனர். தெலுங்கு பாட்டுக்களை; பாடி சாமிகொண்டாடிகள் அருளாக்கப்பட்டு வீராணம் சேவிப்பதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கோமரத்தாடிகள் கால்களில் சாட்டை போட்டு அருள் பெறுதல் ஸ்ரீகங்கையம்மன் கோயில் திருவிழாக்களில் சிறப்பு அம்சம் ஆகும். பங்குனி உத்திரத்தன்று இங்கு வந்து குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் சிறப்புக்குரியதாகும். ஆவணி ஞாயிற்று கிழமைகளிலும் வழிபாடு நடத்தப்படுகிறது.   . குல தெய்வமான ஸ்ரீகங்கையம்மன் வழிபாட்டில் மற்ற தெய்வங்களுக்குச் செய்யும் வழிபாடு போன்றே நடத்தப்பட்டாலும் பொங்கலிட்டு படைத்து வழிபாடு நடத்தும் வழக்கம் இதன் தனிச் சிறப்பாகும். ஸ்ரீகங்கையம்மன் வழிபாட்டில் சைவ வழிபாட்டு முறை மட்டுமே  நடைமுறையில் உள்ளது. 

தலவிருட்சம்:
     அம்பாள் ஆத்திமரத்தடியில் காட்சியளித்ததால் ஆத்திமரமே இத்தலத்தின் தலவிருட்சமாகும். இம் மரத்தடியில் விநாயகர், கங்கையம்மனுடன் லிங்கம், நந்திகேஸ்வரர், கங்கையின் சகோதரரான போத்துராஜா முதலான சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பலகாலமாக வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இதுவே ஆதிகோயிலாகும். அத்திமரத்தடியில் உதித்த கங்கையம்மன் ‘அத்திமரத்தாள், ‘கங்கா பகீரதி’ என்றும் வழிபடப்படுகிறாள். இங்கு நாகர் சுயம்புவாக இருக்கிறது. இக்கோயிலில் இருக்கும் மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில் காணப்படும் உசிலை, ஆத்தி மற்றும் ஆல மரங்களாகும். மரங்களின் தன்மையை வைத்தும் ஸ்ரீகங்கையம்மனை வழிபடும் வடுகாயர் இனமக்கள் தலைமுறையை வைத்தும் பார்த்தால் இக்கோயில் சுமார் 400 ஆண்டு காலமாக வழிபாட்டில் இருப்பதாக கணிக்கபடுகிறது.
ஆத்திமரத்து ஸ்ரீகங்கையம்மாளுக்கு இதற்கு முன் 1955, 1990 ம் ஆண்டுகளில் கோயில் கொடை நடைபெற்றது. தற்போது பெரியோர்கள் முயற்சியாலும் அம்மனின் அருளாலும் கொடைவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

செல்லமுத்து அய்யனார் சாஸ்தா.
                         இத்திருக்கோயில் அருள்மிகு கங்கையம்மன், அருள்மிகு காளியம்மன் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. பங்குனி உத்திர நாளன்று பகல் மற்றும் இரவு நேரங்களில் பூஜைகள் நடைபெறும். தச்சநல்லூர், இடைகால், விக்கிரமசிங்கபுரம், திருவணந்தபுரம், மன்னார்கோயில் மற்றும் பல ஊர்களிலிருந்தும் வரும் பக்தர்கள் இக்கோயிலில் வழிபாடு செய்கின்றனர்.

கொடைவிழா
                                  கிராம மக்கள் அனைவரும் இணைந்து ஒரே  நாளில் படையலிட்டு அம்மனை வழிபடுதல்  கொடை நிகழ்சியாகும். அம்மை, காலரா போன்ற கொடிய நோய்கள் பரவாமல் இருப்பதற்காகவும் நம்மை துன்பத்திலிருந்து காப்பதற்காகவும் வேண்டிக்கொண்டு அம்மனுக்கு தனித்தனியாகவோ கூட்டாகவோ நேர்த்திகடனை நிறைவேற்ற படையலிட்டு வழிபடும் நிகழ்வு கொடையாகும். வேண்டுதல் நிறைவேறியதற்கு நன்றிகடன் செலுத்தவும் கொடை கொடுக்கப்படுகிறது. இக்கொடைவிழாவில் கங்கையம்மனுக்கு ஞயிற்று கிழமை பூஜையும், போத்துராஜாவுக்கு திங்கள் கிழமையும் மரபு மாறாமல்  நடைபெறும். 
         கங்கையம்மன்  வழிபாட்டில் குங்கும் மட்டுமே பிரசாதமாக வழங்கப்படுகிறது. திருநீறு வழங்கப்படுவதில்லை. விசேஷ காலங்களில் கும்பத்தில் வைப்பதற்கோ, தீர்த்த குடங்களில் வைப்பதற்கோ தோரணம் கட்டுவதற்கோ வேப்பிலை பயன்படுத்துவதில்லை. மாவிலை மட்டுமே பயன் படுத்தப்படுகிறது. அம்மனின் பூஜைகளுக்கோ அலங்காரம் செய்வதற்கோ சிகப்பு நிற மலர்களை பயன்படுத்துவதில்லை. வெள்ளை நிற மணமுள்ள மல்லிகை , பிச்சி மலர்களே பூஜைக்கும்  அம்பாளுக்கு அலங்காரத்திற்கும் பயன்படுத்துகிறார்கள்.
                               கொடைவிழாவின் ஆரம்ப நிகழ்ச்சியாக கால் நாட்டுதல், விழா நடக்கும் நாளுக்கு ஏழு நாட்களுக்கு முன்னதாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். விழா தொடங்கபட்டதை ஊருக்கு அறிவிக்கும் நிகழ்சியாக கால் நாட்டுதல் அமைகிறது. கொடைவிழா நிகழ்சிகள் மூன்று நாட்கள் நடைபெறும். முதல் நாள் குடியழைப்பு. குடியழைப்பு என்பது சாமியாடிகளை அழைப்பதாகும். சாமி கொண்டாடிகளுக்கு சந்தனம் குங்குமம் பூசி மாலையிட்டு கையில் குங்குமம் கொடுத்து அழைத்து வருவதாகும். பிறகு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெறும். இரவு திருவிளக்கு பூஜை நடைபெறும்.
                     இரண்டாம் நாள் ஞாயிற்று கிழமை காலையில் காப்பு கட்டல் நிகழ்சியும், அதன் பின் ஏழு சிறு பெண்கள் பட்டாடை, அணிகலன்கள்  அணிந்து சாமிகொண்டாடிகளுடன் ஆற்றிற்கு சென்று நீர் நிலைக்கு ஆரத்தி எடுத்து கங்கா பூஜை செய்து சிறு குடத்தில் ஆற்று நீரை எடுத்து வருவார்கள். கங்கை சிவனின் தலையில் இருந்து ஏழு கிளைகளாக பிரவாகம் எடுத்து வருவதை  குறிக்கும் விதமாக கங்கை, யமுனை, சரஸ்வதி,  சிந்து, காவேரி, கிருஷ்ணா, பிரமபுத்திரா ஆகிய புண்ணிய தீர்த்தமாக உருவகப்படுத்தி தீர்த்தங்கள் எடுத்து வரப்படுகிறது. தெலுங்கு பாடல்கள் பாடி அருளாக்கி ஏழு பெண்கள் தீர்த்தக்குடங்களில் கங்கையை மேளதாளத்துடன் அழைத்து வந்து சுத்தம் செய்யப்பட்ட இடத்தில் நீர் தெளித்து, கரும்பு பந்தலிட்டு வாழையிலை விரித்து அதன் மீது நெல் பரப்பி அதற்கு மேல் இன்னொறு வாழையிலை விரித்து அதன் மீது பச்சரிசி பரப்பி அதன் மீது அந்த ஏழு குடங்களை வைப்பார்கள். இவர்கள் கும்மியடித்து பாடி வழிபாடு செய்வார்கள். பின்பு தீர்தவாரி எடுத்தல் நடைபெறும். கோவிலில் அம்மனுக்கு ஆசார படையல் செய்யப்படும்.
                  உற்சவ கங்கைக்கு அபிஷேகம் செய்து சப்பரத்தில் எழுந்தருள பண்ணி அலங்காரம் செய்து சாமிகொண்டாடிகளை மாத்து விரித்து அமரச்செய்து அவர்களுக்கு அலங்காரம் நடைபெறும். பின்பு பசுங்கன்று (பூவால் செய்யப்பட்ட பொம்மை கன்று) ஒன்றை ஒழித்து வைத்து காட்டமராஜா அதை தேடி எடுத்து வரும்  நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்சி காட்டமராஜா பாலாற்றின் கரையில் பசுக்கூட்டங்களுடன் வரும் போது ஸ்ரீகங்காதேவி அவரை தடுத்து நிறுத்தி தனக்கும் போத்துராஜாவுக்கும் ரணகளத்தில் பூஜை செய்து தருவதாக கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை என்று கூறி பசுங்கன்றை மறைத்து வைத்த சம்பவத்தை நினைவுபடுத்துகிறது. 
கங்கையம்மனின் பூஜைக்கு கரகத்;;திற்கு பதிலாக சிவனின் தலையில் இருந்து ஏழு கிளைகளாக கங்கை பிரவாகம் எடுப்பது போன்;று கெடு என்று சொல்லப்படும் ஏழு வாய் கொண்ட தீர்த்த கெண்டி கொண்டு வருவர். இந் நிகழ்ச்சி பள்ளிகொண்ட ரகுபதி கெடு தூக்கி வருவதாக ஐதீகம். ஊர்வலத்தி;ல் திசை பலி கொடுக்கப்படும். அம்மனுக்கு இரவு பூஜை நடைபெறும். சாமக்கொடை முடிந்தவுடன் பொங்கல் சாதத்தில் 101 பிண்டங்கள் பிடித்து யதுகுல வல்லவ ராஜாக்களுக்கு காட்டமராஜா பிண்டம் கொடுக்கும் நிகழ்வு நடைபெறும்.
                மூன்றாம் நாள் விழாவில் காவல் தெய்வமான போத்துராஜாவுக்கு காவு, படையல் கொடுக்கும் நிகழ்வு நடைபெறும். காட்டமராஜா ரண களத்தில் கங்கையம்மனுக்கு பூஜை போட்டு கொடுப்பதாக அளித்த  வாக்கை நிறைவேற்றுவதற்காக கொடைவிழாவில் இப் படையல் கொடுக்கப்படுகிறது.
விழா முடிந்த நாளிலிருந்து எட்டாவது நாள் சிறப்பு பூஜை செய்து கோவில் கொடைவிழா நிறைவு செய்யப்படும்.
சுபம்.

No comments:

Post a Comment